Published : 03 Jun 2021 05:27 PM
Last Updated : 03 Jun 2021 05:27 PM

5 மாநில  தேர்தலில் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு; 100 சதவீதம் சரியாக இருந்தது: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒப்பிட்டு பார்க்கப்பட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டில் பதிவானதற்கும் இடையே எந்த வித்தியாசங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. யாருக்கு வாக்களித் தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரமும் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

வாக்களிக்கும்போதே அது எந்தச் சின்னத்தில் பதிவாகிறது என்று வாக்காளருக்குக் காட்டும் வகையில், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களைப் பொருத்துவது ஒன்றே சரியான வழிமுறையாக இருக்க முடியும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து அங்கு ஒப்புகைச்சீட்டுகளைக் கணக்கிடும் முறை 2017 முதல் தொடங்கப்பட்டது. இதுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டில் பதிவானதற்கும் இடையே எந்த வித்தியாசங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு (விவிபாட்) இணைப்பு பொருத்துவதை 50% வாக்குச் சாவடிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக கோரிக்கை வைத்தன. இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. எனினும் ஒப்பிடும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது.

இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் முழுமையாக சரிபார்க்க உத்தரவிடுமாறு கோபால் சேத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அவரை தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டை கூடுதலாக சரிபார்ப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டில் பதிவானதற்கும் இடையே எந்த வித்தியாசங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டில் பதிவானதற்கும் ஒப்பிட்டு பார்த்த இடங்களில் 100 சதவீதம் சரியாக இருந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் பரிசோதித்து ஒப்பிட்டு பார்க்கப்பட்ட அளவில் எந்த இடத்திலும் மாறுப்பட்ட எண்ணிக்கை வரவில்லை.

எத்தனை இடங்களில் மாறுபட்ட எண்ணிக்கை வருகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அப்படி எந்த வித்தியாசமும் இல்லை. சரிபார்க்கப்பட்ட அளவில் வாக்குகள் 100 சதவீதம் ஒத்துப்போயுள்ளன’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x