இந்தியாவில் தயாராகும் 3வது தடுப்பூசி: 30 கோடி டோஸுக்கு ஆர்டர் கொடுத்தது மத்திய அரசு

இந்தியாவில் தயாராகும் 3வது தடுப்பூசி: 30 கோடி டோஸுக்கு ஆர்டர் கொடுத்தது மத்திய அரசு
Updated on
1 min read

ஹைதராபாத்தில் இயங்கும் பயாலஜிக்கல்-இ கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடமிருந்து 30 கோடி தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கான பணிகளை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துள்ளது.

கரோனாவுக்கு எதிராக தடுப்பூசியே பேராயுதமாகப் பார்க்கப்படுகிறது. இப்போது நம் நாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளே பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், வரும் ஜூலை இறுதியிலிருந்து அன்றாடம் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி 2021 டிசம்பர் இறுதிக்குள் 100 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சந்தைக்கு 3வதாக உள்நாட்டுத் தயாரிப்பு கரோனா தடுப்பூசி வரவிருக்கிறது. இதற்காக, ஹைதராபாத்தில் இயங்கும் பயாலஜிக்கல்-இ கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடமிருந்து 30 கோடி தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கான பணிகளை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துள்ளது.

இந்த தடுப்பூசி டோஸ்கள், வரும் ஆகஸ்ட்- டிசம்பர் மாதங்களில் உற்பத்தி செய்து, வழங்கப்படும். இதற்கென முன்பணமாக ரூ.1500 கோடியை சுகாதார அமைச்சகம், பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் அளிக்கிறது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றி அடைந்ததை அடுத்து, பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரிக்கும் கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் திட்ட முன்மொழிவை கரோனா தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு முறையாக ஆய்வு செய்து அதன் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிதி உதவியில் ஆதரவு அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பயாலஜிக்கல்-இ நிறுவனத்துடனான இந்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

தற்சார்பு இந்தியா நிதி உதவித் திட்டம் 3.0-வின் ஒரு பகுதியாக, கரோனா தடுப்பூசியின் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய கரோனா தடுப்பூசி மேம்பாட்டு திட்டமான கோவிட் சுரக்‌ஷா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in