Last Updated : 03 Jun, 2021 10:11 AM

 

Published : 03 Jun 2021 10:11 AM
Last Updated : 03 Jun 2021 10:11 AM

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை: கடந்த ஓர் ஆண்டில் 6-வது பாஜக தலைவர் பலி

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக தலைவரும், கவுன்சிலருமான ராக்கேஷ் பண்டிதா கொல்லப்பட்டார்.

பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா நேற்று இரவு தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு 10.15 அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டத்தில் பண்டிதாவும், அவருடன் வந்த நண்பரின் மகளும் காயமடைந்தனர்.

பலத்த காயமடைந்த ராகேஷை அங்கிருந்த மக்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நண்பரின் மகள் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார்.

பாஜக தலைவர் ராகேஷ் கொல்லப்பட்டதற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பாஜக தலைவர், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில் “ பாஜக தலைவர் ராகேஷுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது, பாதுகாப்பு வளையத்தில் உள்ள நபராக ராகேஷ் இருந்தார். ஆனால், இந்த சம்பவம் நடந்தபோது, தனது சொந்த கிராமத்துக்குச் செல்ல இருப்பதால், பாதுகாவலர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு ராகேஷ் சென்றுள்ளார்,

அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் ராகேஷ் மறுத்துள்ளார். இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் பாதுகாப்பு இல்லாமல் ராகஷ் ஏன் சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் பாஜகவைச் சேர்ந்த 5 தலைவர்கள் கொல்லப்பட்டனர். ராகேஷ் 6-வது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ தீவிரவாத தாக்குதலில் கவுன்சிலர் ராகேஷ் பண்டிதா புல்வாமா பகுதியில் கொல்லப்பட்டது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறேன்.இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் தீவிரவாதிகள் ஒருபோதும் வெல்ல முடியாது. இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்ட கண்டனத்தில் “ தீவிரவாதிகளால் பாஜக தலைவர் ராக்கேஷ் கொல்லப்பட்டது கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஜம்மு காஷ்மீரில் இதுபோன்ற அறிவற்ற வன்முறைகள் பெரும் சோகத்தைத்தான் ஏற்படுத்தும். ராகேஷ் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அணுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பாஜக பொதுச்செயாலாளர் அசோக் கவுல் கூறுகையில் “ பாஜக கவுன்சிலரை தீவிரவாதிகள் கொலை செய்தது காட்டுமிராண்டித்தனமானது. கோழைத்தனமானது. இதுபோன்ற தாக்குதல்களால் பாஜகவின் தன்னம்பிக்கையை குலைத்துவிட முடியாது. இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை விடமாட்டோம்.

பாஜகவின் நிர்வாகிகளையும், அப்பாவித் தொண்டர்களையும் தீவிரவாதிகள் குறிவைக்கின்றனர். ஆனால், ஒவ்வொருவரும் இந்த தேசத்துக்கு தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று தீவிரவாதிகளுக்கு தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x