Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் துறை தொடர்பான ரகசியங்களை வெளியிட மத்திய அரசு தடை

உளவுத் துறை மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் தங்கள் துறை தொடர்பான ரகசிய தகவலை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதியம்) திருத்த விதிகள் 2021-ஐ மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கடந்த மே 31-ம் தேதி வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் 2-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், தங்கள் துறை தொடர்பான ரகசிய தகவலை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. துறையைச் சேர்ந்த எந்த ஒரு அதிகாரி தொடர்பான தகவலையோ, துறையில் பணிபுரியும்போது கிடைத்த நிபுணத்துவம் அல்லது அறிவு உள்ளிட்ட எந்த தகவலையும் தான் பணிபுரிந்த அமைப்பின் தலைவருடைய முன் அனுமதியைப் பெறாமல் பொதுவெளியில் பகிரக் கூடாது. பழைய விதிமுறைகளில் தனது துறை உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற்றால் போதும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அறிவியல் அல்லதுபொருளாதார நலன், பிற நாடுகளுடனான உறவு ஆகியவற்றுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய ரகசிய தகவலை பகிர்ந்து கொள்ளவும் தடை விதிக்கப்படுகிறது.

உளவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி பணியிலிருந்து ஓய்வு பெறும்போது, தனது துறை அல்லது அமைப்பு தொடர்பான எந்த ஒரு தகவலையும் வெளியிட மாட்டேன் என உறுதிமொழி வழங்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுபவர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் அல்லது திரும்பப் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x