

மகப்பேறு விடுமுறைக்குப் பின்னர் பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது பணியாளர்களின் குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசு,யூனியன் பிரதேச அரசுகளின் தொழிலாளர் நலத் துறை செயலர்களுக்கு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகப்பேறுகால பலன் (திருத்த) சட்டம் 2017 பிரிவு 5(5)-ன் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். கரோனா பெருந்தொற்றின் போது பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
பிரிவு 5(5) குறித்த விழிப்புணர்வை பெண் பணியாளர்கள் மற்றும் பணி வழங்குவோர் மத்தியில் ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தப் பிரிவின்படி, தாய்மார்கள் குழந்தை பிறந்து குறைந்தபட்சம் ஓராண்டு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்த வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.