

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டைநாடுகளில் இருந்து அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள் போன்ற முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 28ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘‘குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஏற்கெனவே நடந்த வழக்கு விசாரணையில் அந்த சட்டத்துக்கான விதிகள் உருவாக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியது. இப்போது, முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது செயல்படுத்தப்பட்டால் குடியுரிமை திருத்த சட்டமே இல்லாமல் அகதிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமே குடியுரிமை வழங்கப்படும். எனவே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு முடியும் வரை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது. மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது. - பிடிஐ