Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

பரோலுக்கு விண்ணப்பிக்க தகுதி இருந்தும் விடுதலையாக விரும்பாத சிறைக் கைதிகள்

மகாராஷ்டிராவில் பரோலில் விடுதலையாகத் தகுதியுடைய இருபதுக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தற்போதைய கரோனாசூழல் மற்றும் தங்கள் வாழ்வாதாரம் கருதி சிறையிலிருந்து விடுதலையாக விரும்பவில்லை.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகுசிறைகளில் நெரிசலை தவிர்ப்பதற்காக, தகுதிவாய்ந்த கைதிகளை பரோலில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மகாராஷ்டிர மா;நிலத்தில் உள்ள46 சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அவசர கால பரோல் மற்றும் தற்காலிக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். பிறகு கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மாதம் 68 கைதிகள் அவசர கால பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

தொற்று நோய் சட்ட அமலாக்கம் திரும்பப் பெறப்படும் போது அவர்கள் சிறைக்குத் திரும்பினால் போதுமானது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா முழுவதும் பரோலுக்கு விண்ணப்பிக்க தகுதி இருந்தும் 26 கைதிகள் விடுதலையாக விரும்பவில்லை.

வேலை பிரச்சினை

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் ஒருவர் கூறும்போது, “கரோனா ஊரடங்கு காலத்தில் வேலை தேடுவதற்கோ அல்லது வேறு வாழ்வாதாரத்துக்கோ வாய்ப்பில்லை என்பதால் சிலர்விடுதலை வேண்டாம் என்கின்றனர்.

உதாரணத்துக்கு ஒடிசாவை சேர்ந்த 30 வயது கைதி ஒருவர் விடுதலை மூலம் தனது குடும்பத்துக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. அதற்கு பதிலாக சிறையில் வேலை செய்வதன் வருவாய் ஈட்ட விரும்புவதாகக் கூறுகிறார்.

தண்டனைக் காலம் குறைவாக உள்ளவர்களும் விடுதலையாக விரும்பவில்லை. இவர்கள் தண்டனைக் காலத்தை இயன்றவரை விரைவாக முடித்து விட விரும்புகின்றனர்” என்றார்.

மேற்கு மகாராஷ்டிராவில் சிலமாதங்களுக்கு முன் பரோலில் விடுதலையான ஒருவர், பரோலை முன்கூட்டியே முடித்துக் கொள்வதாக கூறி கடந்த மாதம் சிறைக்கு திரும்பினார்.

கைதிகள் எண்ணம்

இதுகுறித்து மகாராஷ்டிராவில் தண்டனைக் கைதிகளுடன் இணைந்து செயல்படும் ‘வர்காத்’ அமைப்பின் தலைவர் ரவீந்திர வைத்யா கூறும்போது, “சிறைக்கு திரும்பிய பிறகு அக்கைதி தனது தாயாருக்கு நிதியுதவி கேட்டு எங்களை அணுகினார். ஊரடங்கு காலத்தில் 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அல்லது அவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் ரேஷன் பொருட்கள் வழங்கினோம். இவர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் விடுதலையானவர்கள். ஏற்கெனவே சிரமத்தில் இருக்கும் தங்கள் குடும்பங்களுக்கு தாங்கள்சுமையாக இருப்பதாக இவர்கள் கருதுகின்றனர்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x