Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

தினமும் இரவு 8 மணி வரை மட்டுமே திருப்பதி ஏழுமலையான் தரிசனம்

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா பரவலால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்து கொண்ட 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தினமும் அனுமதி வழங்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமா ? இல்லையா ? என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் அலிபிரி மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஜூலை 31-ம் தேதி வரை இந்தப் பாதை மூடப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகவே பக்தர்கள் வாரி மெட்டு பகுதி வழியாக திருமலைக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை திருப்பதி ரயில் நிலையம் மற்றும் அலிபிரி அருகே இருந்து இலவச பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவைக்குப் பின்னர் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x