

நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டதாக கூறிய நடிகர் ஷாருக்கானின் 'தில்வாலே' திரைப்படத்தின் காட்சிகளை விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், சிவசேனா உள்ளிட்ட அமைப்பினர் நிறுத்தியுள்ளனர்.
இதனால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் திரையரங்க உரிமையாளர்களுக் கும் இந்துத்துவா அமைப்பின ருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்காததால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் மங்களூருவை சேர்ந்த பெண்ணியவாதி வித்யா டிங்கர் என்பவர், தில்வாலே திரைப் படத்தை நிறுத்திய இந்துத்துவா அமைப்பினரை கண்டித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக் கை எடுக்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மங்களூரு மாநகர பஜ்ரங் தளம் பொறுப்பாளர் ஷர்வன் பம்ப்வெல், தனது பேஸ்புக் பக்கத்தில் வித்யா டிங்கரை கடுமையாக விமர்சித்து பதிவுகளை பதிந்தார். மேலும் வித்யா டிங்கருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், ''இந்துத்துவா அமைப்பினரை எதிர்த்தால் உன்னை பலாத்காரம் செய்துவிடுவேன்'' என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வித்யா டிங்கர் மங்களூரு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஷர்வன் பம்ப்வெல் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.