Last Updated : 22 Dec, 2015 06:05 PM

 

Published : 22 Dec 2015 06:05 PM
Last Updated : 22 Dec 2015 06:05 PM

பதிவுகள் 2015: மோடியின் முனைப்பும் இந்திய - யுஎஸ் உறவும்

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு சற்று பலம்பெற்றது என்றே கூற வேண்டியுள்ளது. 2015-ல் இரு நாட்டு தலைவர்களின் நடவடிக்கைகளும் அதனால் ஏற்பட்ட சில முன்னேற்றங்களும் இருநாட்டு நல்லுறவையும் மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது அதனை நமக்கு உணர்த்துகின்றன.

§ 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒருவரை முதன்முறையாக நமது குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். சர்வதேச அளவில் மிகவும் பேசப்பட்ட பயணம் இது. இதனால் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பருவநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, அணுசக்தித் துறையில் முதலீடு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

§ மற்றொரு சிறப்பு, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் அமெரிக்க அதிபர் ஒருவர் தமது பதவி காலத்தின் போது இரண்டு முறை இந்தியா வந்ததும் இதுவே முதல் முறையாகும். (ஏற்கெனவே அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது இந்தியா வந்திருந்தார்). ஆக ஆண்டின் முதல் கட்டத்திலே இரு நாட்டு உறவுக்குமான பாலம் வலுபெற்றது.

§ இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும். அமெரிக்க தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அவர்களுக்கு கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று கூறிய பிரதமர் மோடி ஒபாமாவின் பயணத்தினை தொடர்ந்து அடுத்து 9 மாதத்தில், அமெரிக்கா சென்றார்.

§ செப்டம்பர் 29-ஆம் தேதி வாஷிங்டன் சென்ற மோடி அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விருந்தினர் மாளிகையான பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் முக்கியப் பங்குவகிப்பது பிளேர் ஹவுஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு அடல் பிஹாரி வாஜபாயி இந்த பெருமைக்குரிய அதிகாரபூர்வ அமெரிக்க அதிபர் விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டார். அதன் பின் சென்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இங்கு தங்கவைக்கப்படவில்லை.

§ 'ரசனை கொண்ட பரிசு' - வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்திக்கும்போது, அவருக்கு 'காந்தியின் பார்வையில் கீதை' என்ற புத்தகத்தை மோடி பரிசாக அளித்தார். ஒபாமாவின் ரசனையை நன்கு அறிந்த நரேந்திர மோடி, 'காந்தியின் பார்வையில் கீதை', ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் தொடர்பான குறிப்புகள் கொண்ட நூல்களை பரிசாக வழங்கினார்.

§ நியூயார்க்கின் மேடிஸன் சதுக்கப் பூங்காவில் அமெரிக்க இந்தியர்கள் அளித்த வரவேற்புக் கூட்டத்தில் 18 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற விழாவில் மோடி உரையாற்றினார்.

§ அடுத்ததாக ஐ.நா. பொதுச் சபையின் 70-வது ஆண்டு அமர்வில் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். "ஐ.நா. சபையில் பிரதமராக பங்கேற்று பேசுவது எனக்கு பெருமை அளிக்கிறது. நாடுகள் கடைப்பிடித்து வரும் கொள்கைகள் குறித்து பேச நான் இங்கு வரவில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கென தனிக் கோட்பாடு உண்டு. அதுதான் அந்த நாட்டை வழி நடத்தும். இந்த உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்தியாவின் தத்துவம். இந்திய மக்களின் நம்பிக்கையும், உள்ளத்தில் உள்ள பேரார்வத்தையும் நான் அறிந்துள்ளேன். 125 கோடி மக்களை கொண்ட இந்தியாவிடம் இருந்து இந்த உலகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் அறிவேன்." என்று அவர் பெருமிதத்துடன் பேசியதை சர்வதேச ஊடகங்கள் கொண்டாடின என்றே கூற வேண்டும்.



பாகிஸ்தான் பத்திரிகையின் புகழாரம்

§ ஐ.நா. பொதுக் கூட்டத்தில் தமது நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சில் இல்லாத அனைத்து அம்சங்களும் இந்தியப் பிரதமர் மோடியின் பேச்சில் இருந்ததாக பாகிஸ்தான் பத்திரிகை புகழாரம் சூட்டியது. 'ஐ.நா.-வில் மோடி' என்ற தலைப்பில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையான 'டெய்லி டைம்ஸ்' தலையங்கம் வெளியிட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை காட்டிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வகையிலும் ஐ.நா. கூட்டத்தில் பேசி, அனைவரையும் வசீகரித்ததாக குறிப்பிட்டு புகழாரம் சூட்டியது.

§ அமெரிக்காவிலிருந்து பிரதமர் மோடி புறப்பட்ட போது, மோடியை தனது நண்பர் என்றும் ராஜீய உறவுகள் ரீதியில் நல்ல கூட்டாளி ( ஃப்ரெண்ட் அண்ட் பார்ட்னர்) என்றும் வர்ணித்தார்.

§ இரு நாட்டுத் தலைவர்களின் உறவின் வளர்ச்சியால், அவர்கள் இருவரும் எந்நேரமும் எளிதில் தொடர்பு கொண்டு பேசக் கூடிய “ ஹாட்லைன்” தொலைபேசி வசதியை அமெரிக்க அரசு ஏற்படுத்தியது. இந்த ஹாட்லைன் வசதி ஓரிரு முறை பயன்படுத்தப்பட்டது.

§ ரஷ்யா, பிரிட்டன், சீனா நாட்டு தலைவர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபருடன் ஹாட்லைன் தொலைபேசி வசதியை பெற்றிருப்பது இந்திய பிரதமர்தான். இது தவிர இந்தியா அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேசிக் கொள்ளவும் ஹாட் லைன் வசதி செய்யப்பட்டது. இதனை ஏற்படுத்த இரு தலைவர்களும் டெல்லியில் சந்தித்தபோதே முடிவெடித்தனர்.

§கூட்டுத் தலையங்கம்: பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணம் முடிவடையும் தருணத்தில், ஒபாமாவுடன் இணைந்து அமெரிக்க பத்திரிகைக்காக கூட்டுத் தலையங்கத்தை எழுதினார். '21-ஆம் நூற்றாண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட உறவு' என்ற தலைப்பில் அந்த தலையங்கம் வெளியானது.

"இந்தியா-அமெரிக்கா இடையே ஆன உறவில் புதுப்பிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன. இரு நாடும் தங்களுக்குள் வகுத்து வைத்துள்ள நம்பிக்கை, லட்சியங்கள் ஆகியனவைக்கு புத்துணர்வூட்டுவதற்கான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. " என்ற சாரம்சத்தை அந்த தலையங்கம் கொண்டிருந்தது.

§ அனைத்திலும் முக்கியமானது பாரீஸில் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு. அங்கும், பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்தார். அப்போது பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனைகளை இரு தலைவர்களும் நடத்தினர்.

§ முடிவடைய இருக்கும் இந்த 2015-ல் பயங்கரவாத எதிர்ப்பு, இரு நாட்டு உறவிலுமான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான இந்தியாவின் லட்சிய நோக்கங்களில் அமெரிக்காவும் இணைந்து முனைப்புடன் ஈடுபட ஒப்பந்தங்களை செய்துள்ளது. இவை அனைத்துமே இரு நாட்டுக்கும் வலு சேர்ப்பதாகவே அமையும். அதிலும் இதுவரையில் இல்லாத மலர்ச்சியை இரு நாடுகளும் இணைந்து ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் இயல்பாகவே இருக்கதான் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x