

கரோனா வைரஸ் 2-வது அலையில் சிக்கி இதுவரை நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்தனர். தமிழத்தில் 21 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. கரோனா வைரஸ் 2-வது அலை மக்களைச் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளியிருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இந்த கரோனா 2-வது அலையிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என அமல்படுத்தியுள்ளன.
இந்த பாதிப்பு எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கரோனா கொடூர தாக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இவர்களில் முன்களப் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கரோனா வைரஸ் 2-வது அலையில் ஏராளமான மருத்துவர்களும் பலியாகியுள்ளனர். கரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் 2-வது அலை முடிவதற்குள் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் உள்ளிட்ட பிரபலமான பல மருத்துவர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் கரோனா வைரஸ் 2-வது அலையில் உயிரிழந்த மருத்துவர்கள் குறித்த தகவல்களை ஐஎம்ஏ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஐஎம்ஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கரோனா வைரஸ் 2-வது அலையில் சிக்கி இதுவரை நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக டெல்லியில் இதுவரை 107 மருத்துவர்களும், அடுத்ததாக பிஹார் மாநிலத்தில் 96 மருத்துவர்களும் இதுவரை கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 67 மருத்துவர்கள், ராஜஸ்தானில் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 32 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.
தெலங்கானாவில் 32 மருத்துவர்கள், குஜராத்தில் 31 மருத்துவர்கள், , மேற்கு வங்கத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
ம், ஒடிசாவில் தலா 22 மருத்துவர்கள், தமிழத்தில் 21 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் 17 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.
.இவ்வாறு ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.
முன்னதாக மே 22-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் கரோனா 2-வது அலையில் 420 மருத்துவர்கள் பலியானதாக ஐஎம்ஏ தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.