

பிரதமரின் புயல் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு தங்கள் சொந்த ஈகோ முக்கியமாகி விட்டது என மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் விமர்சித்து இருந்தார். என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
யாஸ் புயலால் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். அதிகாரிகளும் தாமதமாகவே வந்தனர்.
மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
இந்த விவகாரம் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாயாவை உடனடியாக பணியாளர் பயற்சி துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால் அவரை அனுப்பி வைக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜ மறுத்து விட்டார். இதனிடையே அவர் ஓய்வு பெற்றார். அவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து பிரதமர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அலபன் பண்டோபாத்யாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் பிரதமரின் ஆய்வுக்கூட்டத்தில் நடந்தது பற்றி மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதால், உண்மையை தெளிவுபடுத்த இதை சொல்கிறேன். ஆய்வுக்கூட்டத்துக்கு முந்தைய நாள் இரவு 11.16 மணிக்கு மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து என்னிடம் அவசரமாக பேச விரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி, பிரதமருடனான ஆய்வுக்கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் (சுவேந்து அதிகாரி) பங்கேற்றால், தானும், தனது அதிகாரிகளும் புறக்கணித்து விடுவோம் என்பதை சூசகமாக தெரிவித்தார். மக்கள் சேவையை விட இவர்களுக்கு தங்கள் சொந்த ஈகோ முக்கியமாகி விட்டது. என்ன செய்வது.
இவ்வாறு கூறியிருந்தார்.
மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எம்.பி. சவுகதா ராய் கூறுகையில் ‘‘ஆளுநர் தன்கரின் கருத்து துரதிருஷ்டவசமானது. இப்படி பேச அவருக்கு அதிகாரம் இல்லை. மம்தா பானர்ஜி 24 மணி நேரமும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளாா். மாநில மக்களின் நலன் மீதான அக்கறை அடிப்படையிலேயே அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’’ எனக் கூறியுள்ளார்.