

பிஹாரைச் சேர்ந்த மோகன் பாஸ்வான் (47), டெல்லியில் உள்ள குர்கானில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இதனிைடயே, கரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு தேசிய பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதனால் வருமானம் இன்றி தவித்த மோகன், சில நாட்களுக்கு முன்பு தன்னை சந்திக்க வந்த மகள் ஜோதி குமாரியை (15) அழைத்துக் கொண்டு, சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார்.
போக்குவரத்து முடங்கியதால் தனது தந்தையை சைக்கிளில் அழைத்துச் சென்றார் ஜோதி குமாரி. 1,200 கி.மீ. தொலைவை 7 நாட்கள் பசியும் பட்டினியுமாக கடந்த அவர்கள் ஒரு வழியாக வீடு சென்று சேர்ந்தனர்.
இதுதொடர்பான செய்தி, அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், திடீர் பொதுமுடக்கத்தின் அவலத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியது.
இதன் தொடர்ச்சியாக, சிறுமி ஜோதி குமாரியின் மனவலிமையை இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளும் பாராட்டின. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், ஜோதி குமாரிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சிறுமியின் குடும்பத்துக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டன. ஜோதி குமாரியின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாகவும் சில கட்சிகள் அறிவித்தன.
இந்த சூழலில், சிறுமி ஜோதி குமாரியின் தந்தை மோகன் பாஸ்வான், மாரடைப்பு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், தந்தையை இழந்து வாடும் சிறுமிக்கு பிஹார் அரசு உதவி செய்ய வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.