பேட்டரி வாகனங்களுக்கு பதிவுக் கட்டணத்தில் விலக்கு: மத்திய அரசு திட்டம்
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அவற்றுக்கான பதிவுக் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அவற்றுக்கான விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேட்டரி வாகனங்களுக்குப் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிப்பதற்கான பரிந்துரையும் உள்ளது.
இந்த வரைவை அமைச்சகம் மே 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அதாவது ஜூன் 27க்குள் வரைவு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் பெறப்பட்ட பிறகு அவற்றின் மீது அமைச்சகம் ஆலோசனை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் வரைவின் மீது தீர்மானமான முடிவுகள் எடுக்கப்பட்டு மோட்டார் வாகன சட்டம் 1989 விதிமுறைகளில் தேவையான மாற்றங்கள் மேற்கொள் வதற்கான அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டுவருகிறது. அரசின் முயற்சி களால் கடந்த சில ஆண்டுகளில் பல் வேறு மின்சார வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு துறைகளில் பெரும்பாலும் தற்போது மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
