

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக காஷ்மீரின் ஜம்மு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீடியோ மூலம் புகார் அளித்தார்.
“ஆன்லைன் வகுப்பு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. என்னை போன்ற சிறு குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு நேரம் பாடம் நடத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு பிரதமர் நரேந்திர மோடி தீர்வு காண வேண்டும்" என்று சிறுமி கோரியுள்ளார். சிறுமியின் புகார் குறித்து காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "மிக அழகான புகார். குழந்தைகளின் அப்பாவித்தனம் கடவுளின் பரிசு. அவர்கள் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எனவே குழந்தைகளின் கல்வி தொடர்பான தொடர்பான கொள்கையை மாற்ற பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக குழந்தைகளின் வீட்டுப்பாட சுமையைக் குறைக்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் புதிய கொள்கையை வரையறுக்க அறிவுறுத்தியுள்ளேன்" என கூறப்பட்டுள்ளது.