Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

பிரதமரை புறக்கணிப்பேன் என மம்தா அச்சுறுத்தினார்: மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் புயல் சேதம் குறித்த பிரதமரின் ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பங்கேற்றால் அக்கூட்டத்தை புறக்கணிப்பேன் என முதல்வர் மம்தா அச்சுறுத்தியதாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் “யாஸ்“ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை வான் வழியே பார்வையிட்டார். இதையடுத்து பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டம், கலைக்குண்டா விமான நிலையத்தில் பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர், பாஜக எம்.பி. தேவ சவுத்ரி ஆகியோருடன் எதிர்க்கட்சித் தலைவரும் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தாவை தோற்கடித்தவருமான சுவேந்து அதிகாரியும் அழைக்கப்பட்டிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த மம்தா, கூட்டத்துக்கு சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்தார். மேலும் இக்கூட்டத்தில் மம்தா 15 நிமிடங்கள் மட்டுமே பங்கேற்றார். புயல் சேதம் குறித்த விவரங்களை பகிர்ந்துகொண்ட பின், தனக்கு வேறொரு நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி அங்கிருந்து புறப்பட்டார். கூட்டத்தை மம்தா தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பிரதமருக்கு மம்தா நேற்று முன்தினம் எழுதியகடிதத்தில், “பிரதமர் – முதல்வர் இடையிலான கூட்டம் வழக்கமானது என்றாலும் இதில் உள்ளூர்பாஜக எம்எல்ஏ ஒருவரை சேர்த்துகூட்டத்தின் அமைப்பை மாற்றிவிட்டீர்கள். இக்கூட்டத்தில் ஆளுநரோ, மத்திய அமைச்சர்களோ பங்கேற்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் பிரதமர் – முதலமைச்சர் இடையிலான கூட்டத்தில் ஒரு எம்எல்ஏவுக்கு இடமில்லை” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைக்குண்டா கூட்டத்துக்கு முன் முதல்வர்மம்தா பானர்ஜி என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பங்கேற்றால் அக்கூட்டத்தில் தானும் தனது அதிகாரிகளும் பங்கேற்க மாட்டோம் என அச்சுறுத்தினார்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு திரிணமூல் காங்கிரஸ் அளித்துள்ள பதிலில், “ஆளுநரின் கருத்து துரதிருஷ்டவசமானது. முதல்வர் மம்தா 24 மணி நேரமும்மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது அனைத்து செயல்பாடுகளுக்கும் மாநில நலன்கள் மீதான அக்கறையே அடிப்படையாக உள்ளது” என்று கூறியுள்ளது.

இதனிடையே கலைக்குண்டா கூட்டத்துக்கு பிறகு அக்கூட்டத்துக்கு முதல்வருடன் வந்திருந்த தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயாவின் பணி தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அயல் பணியில் இருந்து மத்திய அரசுப் பணிக்குத் திரும்புமாறு பந்தோபாத்யாயாவுக்கு கடந்த 28-ம் தேதி மத்திய அரசு கடிதம் அனுப்பியது. இந்த உத்தரவு ஒருதலைப்பட்சமானது என எதிர்ப்புதெரிவித்த மம்தா, பந்தோபாத்யாயாவை நேற்று முன்தினம் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்தார். பின்னர் அவரை 3 ஆண்டுகளுக்கு தனது முதன்மை ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

இது தொடர்பாக பிரதமருக்கு நேற்று முன்தினம் மம்தா எழுதிய கடிதத்தில், பந்தோபாத்யாயாவை தனது ஆலோசகராக நியமித்துள்ளதாகவும் அவரது பணிக்காலத்தின் இறுதி நாளாக மே 31-ம் தேதி, பணி ஓய்வுபெற அவரை அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்நிலையில் மே 31-ம் தேதி டெல்லிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை மீறியது தொடர்பாக அலபன் பந்தோபாத்யாயாவிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பந்தோபாத்யாயாவுக்கு மம்தாவின் கோரிக்கை ஏற்று, மத்திய அரசு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கியது. ஆனால் திடீர் அயல்பணி உத்தரவு காரணமாக பணிநீட்டிப்பை அவர் ஏற்கவில்லை.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x