

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நேற்று 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் 8 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
சண்டிகரின் தானிய சந்தைப் பகுதி செக்டார் 26-ல் இரண்டு மாடி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்தில் நேற்று கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
அப்போது காலை 11.30 மணி அளவில் எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அடித்தளத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
சம்பவ பகுதிக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 6 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இன்னும் 8 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர்.