

தெலங்கானா மாநிலத்தின் அமைச்சர் கே.டி.ராமாராவ், நடிகர் சோனு சூட்டை சூப்பர் ஹீரோ என்று அழைத்துள்ளார்.
தெலங்கானாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருப்பவர் கே.டி.ராமாராவ். கேடிஆர் என்கிற ட்விட்டர் பக்கத்தில் மக்களோடு பேசி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில் கேடிஆர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து அவரை சூப்பர் ஹீரோ என்று வர்ணித்து ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த கேடிஆர், தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மட்டுமே என்றும், உண்மையான சூப்பர் ஹீரோ சோனு சூட்தான் என்றும் பதிலளித்துள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்திருக்கும் சோனு சூட், "உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சார். தெலங்கானாவில் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கும் நீங்கள்தான் உண்மையான ஹீரோ. உங்கள் தலைமையின் கீழ் மாநிலம் சிறப்பாக மேம்பட்டுள்ளது. தெலங்கானாவை எனது இரண்டாவது வீடாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் அது நான் வேலை செய்யும் இடம். இவ்வளவு வருடங்களாக அந்த மக்கள் என் மீது நிறைய அன்பைப் பொழிந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் கரோனா நெருக்கடி காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்பு தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.
இன்று வரை ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்பாடு செய்வது எனப் பல்வேறு நல உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.