பஸ் மோதியதில் ஏர் இந்தியா விமானம் கடும் சேதம்

பஸ் மோதியதில் ஏர் இந்தியா விமானம் கடும் சேதம்
Updated on
1 min read

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அல்லையன்ஸ் ஏர் நிறுவன விமானத்தில் பஸ் மோதியது. இதனால் விமானத்தின் வெளிப்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. சேதத்தின் மதிப்பு சுமார் ரூ. 400 கோடியாகும்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சேவை மற்றும் பராமரிப்பு பேருந்து, விமானத்தின் பக்கவாட்டு பகுதியில் மோதியது.

இந்த விபத்து நேற்று அதிகாலை 5.25 மணியளவில் நடந்துள்ளது. விபத்தில் எவருக்கும் காயமில்லை. இதன் காரணமாக சில்சார் மற்றும் ஷில்லாங் பகுதிக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பணியின் போது பஸ் ஓட்டுநரின் கவனக் குறைவு காரணமாக சேதம் ஏற்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிர்வாகமோ நிறுத்தப் பட்டிருந்த விமானத்தில் ஓட்டுநர் தற்செயலாக மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள் ளது.

இது குறித்து பேசியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள், ஏர் இந்தியா விமானம் 32 வது மேடையில் நிறுத்தப்பட்டிருந்தது. சில்சார் புறப்படுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விமானத்தின் மீது மோதியது என்று கூறியுள்ளனர்.

விமானத்தின் வலது பக்க என்ஜின், வலது பக்க லேண்டிங் கியர் மற்றும் பிற பாகங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையம், காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் பிற அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கவனக்குறைவால் சேதம் ஏற்படுத்துதல் என்கிற வகையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த மோதலில் எவருக்கும் காயமில்லை என்று கூறியுள்ளது, என்றாலும் தனியாக விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் ஏற்பட்ட சம்பவம் தற்செயலாக ஏற்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

அதிகாலையில் போதிய வெளிச்சம் இருந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பஸ் பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த விமானத்தில் மோதியுள்ளது என்று ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ. 400 கோடியாகும். பஸ்ஸின் ஓட்டுநர் மொமின் அலி கைது செய்யப்பட்டுள்ளார். இரவு நேர பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட அசதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் ஏகே.சர்மா குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in