Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி; கரோனா சிகிச்சை பெற ரூ.5 லட்சம் வரை கடன்: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

கரோனா மருத்துவ சிகிச்சைக்கு தனி நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப் படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. மாத சம்பளம் பெறுவோர் மற்றும் இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் இத்தகைய கடன் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எவ்வித பிணையும் இல்லாமல் இந்த கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு காரண மாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ள தாகவும், நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார்.

இதன்படி, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்த அவசர காலகடன் உத்தரவாத திட்டத்தின் (இசிஜிஎல்எஸ்) கீழ் ரூ. 2 கோடி வரை அதிகபட்சம் 7.5 சதவீத வட்டியில் அளிக்கப்படும்.

ஆக்சிஜன் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அதை விரிவாக்கம் செய்ய விரும்பினால் அதிகபட்சம் ரூ.100 கோடி வரை வழங்கப்படும். கரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க ரூ. 50 ஆயிரம் கோடி நிதியை அவசரகால மருத்துவ சேவைக்காக ஒதுக்கீடு செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள் கரோனா சிகிச்சை கடன் என தனி பிரிவை தொடங்கி தேவைப்படுபவர்களுக்கு கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

கரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க உதவும் விதமாக பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைந்து தேவையான நிதி வழங்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x