ரமேஷ் சென்னிதலா
ரமேஷ் சென்னிதலா

வேதனையில் இருப்பதாக சோனியாவுக்கு கடிதம் அனுப்பிய ரமேஷ் சென்னிதலா: பதவி வழங்காததால் அதிருப்தி; கேரள காங்கிரஸில் அடுத்த குழப்பம்

Published on

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனால் கேரளத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்னும் நாற்பதாண்டு கால வரலாறும் மாறியிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார்.

கேரள காங்கிரஸில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் ஓர் அணியும், ரமேஷ் சென்னிதலா தலைமை யில் ஓர் அணியும் செயல்படுகின்றன. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் தலைமையிலான எல்.டி.எப் கூட்டணி 99 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எப் கூட்டணி 41 இடங்களிலும் வென்றது.

கேரளாவில் கடந்த 5 ஆண்டு காலத்தில் ரமேஷ் சென்னிதலா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

முந்தைய மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிராக சபரிமலைப் போராட்டம், தங்கக் கடத்தல் விவகாரம் ஆகிய பிரச்னைகளையும் ரமேஷ் சென்னிதலா வீரியத்துடன் நடத்தி னார். ஆனாலும் அவருக்கு இம்முறை எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. எர்ணாகுளம் மாவட்டத்தின் பறவூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சதீசன் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரமேஷ் சென்னிதலா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

தேர்தல் நிர்வாகக் குழுவின் தலைவராக உம்மன் சாண்டியை நியமித்ததுதான் காங்கிரஸ், கூட்டணியில் இருந்து இந்து வாக்காளர்களை அந்நியப்படுத்திவிட்டது. அதுதான் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது. அப்போதே நான் ஓரங்கட்டவும், அவமானப் படுத்தப்படவும் பட்டேன்.

அப்போதே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தலைமை விரும்புகிறது என்று கூறியிருந்தால் நானே ஒதுங்கியிருப்பேன். அதுவே எனக்கு கவுரவமாக இருந்திருக் கும். இப்போதும் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. 40 ஆண்டு கட்சிக்கு நான் செய்த பணிகளை சோனியா, ராகுல் அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு கடிதத்தில் சென்னிதலா கூறியுள்ளார்.

கேரள காங்கிரஸ் கட்சியில் 9 ஆண்டுகள் தலைவராக இருந்திருக்கும் சென்னிதலா நான்கு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். தற்போது 5-வது முறையாக எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in