

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் மக்களின் நலனுக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் 4 விதமான உதவி எண்களை அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும் என்று தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அனைத்து தனியார் சேனல்களுக்கும் எழுதிய கடித்தில் கூறப்பட்டிருப்பதாவது:
''கரோனா வைரஸுக்கு எதிராக மத்திய அரசும், மக்களும் போராடும்போது அதற்குத் துணையாக ஊடகங்கள் செய்யும் பணி பாராட்டுக்குரியது. மக்களிடையே கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஊட்டுதல், தகவல்களைக் கொண்டு சேர்த்தல், சிகிச்சை முறைகள், முன்னெச்சரிக்கை வழிமுறைகள், தடுப்பூசி ஆகியவை குறித்து மிகவும் ஆக்கபூர்வமான தகவல்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் கூடுதலாத தனியார் சேனல்கள் மக்களின் நலனுக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் சில பணிகளைச் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேனல்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் அறியும் வகையில் தேசிய அளவிலான உதவி எண்களை அவ்வப்போது வெளியிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக ப்ரைம் டைம் எனச் சொல்லப்படும் நேரத்தில் இந்த உதவி எண்கள் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் உதவி எண் (1075), மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகள் உதவி எண் (1098), சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் முதியோர் உதவி எண்(14567) ஆகியவற்றை டெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தெரியப்படுத்த வேண்டும்.
இது தவிர தேசிய மனநலம் மற்றும் நரம்பியல்அறிவியல் மையத்தின் உளவியல் ரீதியான சிகிச்சைக்கான உதவி எண் (08046110007) ஆகிய எண்களை அடிக்கடி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து நீங்கள் அறிவீர்கள். கரோனா தொற்று குறைந்து வந்தாலும் இன்னும் பாதிப்பு குறையவில்லை. கடந்த பல மாதங்களாக பல்வேறு தளங்களான தொலைக்காட்சி, நாளேடுகள், வானொலி, சமூக வலைதளம் மூலம் மத்திய அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது.
இதில் கரோனா சிகிச்சை குறித்தும், தடுப்பூசி குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஒளிபரப்பி வருகின்றோம். ஆதலால், இந்த தேசியஅளவிலான உதவி எண்களை மக்களின் நலனுக்காக ஒளிபரப்ப வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.