12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் பரவல்களுக்கு மத்தியில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் மம்தா சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாகத் தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும் கடினமானது.

ஆதலால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அப்ஜெக்டிவ் முறையில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆதலால், 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார்.

அப்போது வேணுகோபால் நீதிபதிகளிடம் கூறுகையில், “12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது. உரிய இறுதி முடிவுகளை எடுத்து ஜூன் 3ஆம் தேதி தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் கோரிக்கையின்படி ஜூன் 3ஆம் தேதி விசாரணையை ஒத்தி வைக்கிறோம். கடந்த ஆண்டு எடுத்த கொள்கையில் இருந்து நீங்கள் விலகினாலும் அதற்குரிய சரியான காரணத்தைக் கூற வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அதற்குரிய துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசித்து, அனைத்து அம்சங்களையும் ஜூன் 3ஆம் தேதி தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் 15ஆம் தேதிவரை நடக்க இருந்த சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ தேர்வுகளை ரத்து செய்ய கடந்த ஜூன் 26ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்களை மதிப்பிடுவது குறித்த அறிவித்த முறைக்கும் நீதிமன்றம் அனுமதியளித்தது. அதுபோன்று இந்த முறையும் சரியான காரணங்களைக் கூற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in