Last Updated : 31 May, 2021 09:22 AM

 

Published : 31 May 2021 09:22 AM
Last Updated : 31 May 2021 09:22 AM

12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை: இரு வாய்ப்புகள் குறித்து சிபிஎஸ்இ ஆலோசனை


கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 12-ம்வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை அதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்கிறது.

அதேசமயம், 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யலாமா அல்லது நடத்தலாமா என்பது குறித்து ஜூன் 1-ம்தேதி(நாளை)க்குள் மத்திய அ ரசு முடிவு எடுக்க இருக்கிறது. இதற்கிடையே சிபிஎஸ்ஸி இரு வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது, 2-வதாக பிரதானப் பாடங்களுக்கு மட்டும் குறைந்த நேரத்தில்(90நிமிடங்கள்) தேர்வுகளை மாணவர்கள் பயிலும் அந்தந்தப் பள்ளியிலேயே நடத்தி முடிப்பதாகும். இந்த இரு வாய்ப்புகளில் ஒன்றை நாளை தேர்வு செய்யக்கூடும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த நேரத்தில், பாதுகாப்பான முறையில் ஆகஸ்ட் மாதத்தில் 12ம்வகுப்பு தேர்வுகளை நடத்தலாம் என்று பெரும்பாலான மாநிலங்கள் ஆலோசனை தெரிவித்துள்ளன. ஒருவேளை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால், 11ம் வகுப்பு தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் சராசரி எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு ஏற்றார்போல், சிஐசிஎஸ்இ வாரியம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் 12ம்வகுப்பு பயிலும் மாணவர்கள் 11ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண்களை அறிக்கையாக வழங்கக்கோரி பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து சிபிஎஸ்இ தரப்பி்ல் தெளிவான முடிவு ஏதும் இல்லை. சராசரி மதிப்பெண்களை தயாரிக்கும் பணி ஜூன்7ம்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதால் அதில் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில் “ 12-ம் வகுப்புத் தேர்வுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் இறுதியாக எடுக்கப்படவில்லை. ஜூன் 1ம்தேதி இறுதி முடிவு வெளியாகும். மாணவர்கள் பாதுகாப்புதான் மிக முக்கியம், அதேசமயம், தேர்வுகளும் அவசியம் என்பதால் அமைச்சர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே 12ம்வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு இந்த மனு வந்தபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வர் அமர்வு, கூறுகையில் “ 31்ம்தேதி இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கிறோம். எதையும் சாதகமான கண்ணோட்டத்தில் அணுகுங்கள். 31ம்தேதி ஏதேனும் தீர்வுகள் கிடைக்கலாம்” எனத் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும், மாற்று ஏற்பாடுகளைசெய்யக் கோரியும் 300 மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சிபிஎஸ்இ வாரியத்தைப் பொறுத்தவரை இரு வாய்ப்புகளை தீவிரமாகப் பரிசிலீக்கிறது. ஒன்று வழக்கமான தேர்வுகளை ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் நடத்துவது, 2-வதாக குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் படித்த பள்ளிக்கூடத்திலேயே தேர்வுகளை நடத்துவதாகும். தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும் அது குறித்த தெளிவான பதில் ஏதும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x