Published : 31 May 2021 09:06 AM
Last Updated : 31 May 2021 09:06 AM

கோவிட் தேசிய தடுப்பூசித் திட்டம்; ஜூன் மாதத்தில் 12 கோடி கரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு இலக்கு 

கோவிட் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் ஜூன் மாதத்திற்கு சுமார் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் மாதம் முழுவதிற்கும் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுமென மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மே 2021 இல் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு 7,94,05,200 டோஸ்கள் கிடைத்தன. கோவிட் பரிசோதனை, நோய்க்கண்டறிதல், அதற்கான சிகிச்சை அளித்தல் மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஆகியவற்றுடன், தடுப்பூசி என்பது கோவிட் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான உத்திகள் ஆகும்.

நுகர்வு முறை (அ) பயன்படுத்தும் முறை, மக்கள் தொகை மற்றும் தடுப்பூசி வீணாகும் அளவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் ஜூன் மாதம் முழுவதும் தடுப்பூசிகள் கிடைப்பதற்கான இலக்கை 17, 27, 29 மே 2021 தேதியிட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் கடிதங்கள் மூலம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு முன்கூட்டியே தெரிவித்துள்ளது.

முன்னுரிமைக் குழு சுகாதாரப் பணியாளர்கள் (priority group of Health Care Workers - HCWs), முன்களப் பணியாளர்கள் (FLWs), 45 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்கென 6.09 கோடி (6,09,60,000) டோஸ் கோவிட் தடுப்பூசிகள் விலையில்லாமல் மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்களுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடாக ஜூன் மாதத்திற்கு வழங்கப்படும்.

மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மற்றும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் 5.86 கோடி (5,86,10,000) தடுப்பூசிகள் கிடைக்கும். எனவே, தேசிய COVID தடுப்பூசி திட்டத்திற்காக ஜூன் 2021 இல் சுமார் 12 கோடி (11,95,70,000) டோஸ்கள் கிடைக்கும்.

இந்த ஒதுக்கீட்டிற்கான விநியோக அட்டவணை முன்கூட்டியே பகிரப்படும். ஒதுக்கப்பட்ட அளவுகளை சுழற்சி மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும், தடுப்பூசி வீணாவதைக் குறைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மே மாதத்தில், 4.03 (4,03,49,830) கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 3.90 (3,90,55,370) கோடிக்கும் அதிகமாக டோஸ்களை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்துள்ளன. ஆகையால், தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு மே மாதத்தில் மொத்தம் 7,94,05,200 அளவுகள் தடுப்பூசிகள் கிடைத்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x