

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த மார்ச்சில் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டார். அதில், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு அரசு மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்படும் அனைத்து மத புனிதத் தலங்கள் அகற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மாநிலத்தின் 75 மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல ஆணையர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதிலும் துவங்கிய நடவடிக்கையில் இரண்டு மசூதி கள் இடிக்கப்பட்டுள்ளன.
இதில், ஒன்று பாரபங்கியில் ராம் ஸனேஹி காட் தாலுக்காவின் 100 வருடம் பழமையானதாகக் கருதப்படும் மசூதி. கடந்த 17-ம் தேதி இந்த மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து முசாபர் நகரின் கத்தோலி தாலுக்காவிலும் ஒரு மசூதி இடிக்கப்பட்டது. இதன் புதானா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் உ.பி. முஸ்லிம் களை அதிர்ச்சியடைய வைத்துள் ளது. இந்த நிலம் சன்னி முஸ்லிம் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாகக் கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் இடுகாட்டிற்காக என ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தில் பல வருடங்களுக்கு முன்பாக மசூதி கட்டப்பட்டுள்ளது. இதில்,தொழுகை நடத்தி வந்த கத்தோலி பகுதி முஸ்லிம்கள், அதை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியதாகத் தெரிகிறது. அதை கவனத்தில் எடுத்து கத்தோலி தாலுகாவின் துணை ஆட்சியர் இந்திரகாந்த் துவேதி விசாரணை நடத்தினார். இதில், அறியப்பட்ட தகவல்களை உறுதி செய்து அவை உடனடியாக இடிக்கப்பட்டது.
இதை எதிர்த்து போராடிய அப்பகுதி முஸ்லிம்கள் காவல் துறையினரால் விரட்டப்பட்டனர். முசாபர் நகரில் 2013-ல் ஏற்பட்ட மதக்கலவரத்தால் 62 பேர் உயிரிழந்தனர். சுமார் 5,000 முஸ்லிம்கள் வீடுகளை இழந்தனர். எனவே, இந்த மசூதியின் இடிப்பையும் கண்டித்து அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அசதுத்தீன் ஓவைஸி கண்டித்து டுவிட் செய்துள்ளார்.