

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அதன் பிறகு 2019-ல் நடைபெற்ற தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றதை யடுத்து மோடி மே 30-ம் தேதி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார்.
மோடி பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறை வடைந்தன. இதையொட்டி பாஜகசார்பில் நேற்று ‘சேவை தினம்’ கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.
இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப் பேற்று 7 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதற்கு பிரதமர் மோடி மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்த நாளை சேவை தினமாக கொண்டாடுகிறோம். நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் கோடிக்கணக்கான பாஜக கட்சித் தொண்டர்கள் இன்று (நேற்று) சேவை செய்வார்கள்” என பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி உள்ளிட்ட உதவி களை வழங்குவதுதான் இந்த சேவை தினத்தின் நோக்கம் என பாஜக தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் தலா 2 கிராமங் களுக்கு சென்று சேவை பணி களை கண்காணிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில பிரிவுகளுக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “நாட்டு மக்களுக்காக கட்சித் தொண்டர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்காக சேவை செய்வதற்கு பாஜகவுக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.