

உத்தரப் பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கண்ணியமாக அடக்கம் செய்யாமல் ஆற்றில் தூக்கி வீசிய இருவர் சிக்கனர்.
பல்ராம்பூரில் உள்ள கோட்வாலி பகுதியில் ராப்தி நதி பாய்கிறது. பிபிஇ ஆடை அணிந்த ஒருவரும் மற்றொருவரும் ஆற்றுப் பாலத்திலிருந்து உடலைத் தூக்கி ஆற்றில் வீசிய காட்சியைச் சாலையில் காரில் சென்ற ஒருவர் கேமராவில் பதிவு செய்தார். இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து, உடலைத் தூக்கி வீசிய இருவரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பல்ராம்பூர் மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி விஜய் பகதூர் சிங் கூறுகையில், “ராப்தி நதியில் தூக்கி வீசப்பட்ட உடலைக் கைப்பற்றிவிட்டோம். சித்தார்த் நகர் மாவட்டம், சோரத்கார்க் பகுதியைச் சேர்ந்த பிரேம் நாத் மிஸ்ராவின் உடலைத்தான் தூக்கி வீசியுள்ளனர்.
பிரேம்நாத் மிஸ்ரா கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் 28ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடலை கரோனா தடுப்பு விதிகளின்படி பிளாஸ்டிக் கவரில் வைத்து இறுதிச் சடங்கிற்காக மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் வழங்கியது.
ஆனால், பிரேம்நாத் உறவினர்கள் அவரின் உடலை முறையாக அடக்கம் செய்யாமல் ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். அவர்கள் உடலைத் தூக்கி வீசிய காட்சிதான் வீடியோவில் பதிவாகி வைரல் ஆனது. இது தொடர்பாக கோட்வாலி போலீஸ் நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வீடியோவின் அடிப்படையில் உடலைத் தூக்கி வீசிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில் கங்கை, யமுனா நதியில் ஏராளமான உடல்கள் மிதந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமாக அடக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.