

தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று கூறும் நாடுகளில் பணிபுரிவோர், கல்வி கற்போர் ஆகியோருக்காக பாஸ்போர்ட் எண்ணுடன், தடுப்பூசி பெயர் ஆகியவை அடங்கிய தடுப்பூசி சான்றிதழ் கேரள அரசு சார்பில் வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டும் எனக் கூறும் நாடுகளில் பணியாற்றும் கேரள மக்கள், அங்கு பயிலும் மாணவர்கள், வர்த்தகம் செய்வோர் ஆகியோருக்காக கேரள அரசு சார்பில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்.
மத்திய அரசின் சான்றிதழில் பாஸ்போர்ட் எண், தடுப்பூசி பெயர், அடையாள அட்டை விவரம் ஏதும் இல்லை. ஆனால், கேரள அரசின் சான்றிதழில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவரின் பாஸ்போர்ட் எண், அடையாள அட்டை விவரம், தடுப்பூசி பெயர், இரு தடுப்பூசி செலுத்திக்கொண்ட தேதி உள்ளிட்ட விவரங்களுடன் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்.
தடுப்பூசி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் கேரள மக்கள் https://covid19.kerala.gov.in/vaccine/ எனும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். தடுப்பூசி சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவரின் சான்றிதழ்களை, ஆவணங்களை மாவட்ட சுகாதார அதிகாரி ஆய்வு செய்வார். விண்ணப்பத்தை ஏற்கவும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. விண்ணப்பம் ஏற்கப்பட்டால், டிஜிட்டல் முறையில் விண்ணப்பதாரருக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
அதற்குரிய எஸ்எம்எஸ் அனுப்பப்படும். கேரள அரசின் (https://covid19.kerala.gov.in/vaccine/), இணையதளத்திலிருந்து தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மத்திய அரசு வழிகாட்டுதலில் கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸுக்கும் 2-வது டோஸுக்கும் இடைவெளி 16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெளிநாடு செல்வோர் முதல் டோஸ் செலுத்தியபின் இந்த காலகட்டம் வரை காத்திருக்கத் தேவையில்லை, கேரள அரசின் இஹெல்த் போர்டலில் முன்னுரிமைப் பட்டியலில் விண்ணப்பம் செய்து, முறையான ஆவணங்களை வழங்கி, மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம். முதல் டோஸ் செலுத்தியபின் குறைந்தபட்சம் 4 முதல் 6 வார இடைவெளி அவசியம்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.