

உத்தரபிரதேசத்தில் விஷ சாராயம்குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 5 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 25-ம் தேதி ஹாத்ரஸ் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 85 பேரை போலீஸார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 1,700 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.
இந்நிலையில், அலிகார் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் சி.பி.சிங் நேற்று கூறும்போது, “கடந்த 28-ம் தேதி அலிகார் மாவட்டத்தின் 3 கிராமங்களில் உள்ள அரசு உரிமம் பெற்ற மதுக்கடைகளில் வாங்கிய மதுவை குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 22 பேர்உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிதெரிவித்துள்ளார். உயிரிழப்புமேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளச் சாராயமே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, அலட்சியமாக செயல்பட்டதாக மாவட்ட கலால் அதிகாரி உட்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
இது தொடர்பாக அலிகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறும்போது, “விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளோம். இது தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். இதில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகிறோம்.அவர்களைப் பற்றி தகவல் தருவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்” என்றார். - பிடிஐ