

இந்தியாவில் கரோனா தொற்றால் இதுவரை 3.15 லட்சம் பேர் இறந்ததாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் நேற்று முன்தினம் கூறியதாவது:
இந்தியாவில் உயிரிழப்பு குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை யூகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரம் இல்லாதது. எங்களுடைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் 0.05% ஆக உள்ளது. தவிர இறப்புசதவீதம் 1.15% ஆக உள்ளது.கரோனா தொற்று ஏராளமானோருக்கு இருந்தாலும், சிலருக்கு மட்டுமே அறிகுறிகள் தென்படுகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் நிலைதான். கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
ஏனெனில், இந்தியாவில் இறப்பு குறித்து பதிவுசெய்யும் நடைமுறை மிகவும் வலுவானதாக உள்ளது. கரோனா பரவ தொடங்கியது முதல் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, உயிரிழப்பு குறித்து வெளிப்படையாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ