Last Updated : 29 May, 2021 03:16 PM

 

Published : 29 May 2021 03:16 PM
Last Updated : 29 May 2021 03:16 PM

கங்கையில் உடல்களை வீசும் விவகாரம்: இந்து உடல்களின் இறுதிச் சடங்குகள் பற்றி கேள்வி எழுப்புவது கண்டிக்கத்தக்கது; சாதுக்கள் சபை தலைவர் கிரி கருத்து

உத்தரப்பிரதேசம், பிஹாரில் கங்கையில் உடல்கள் எறிவதும், கரைகளில் புதைப்பதும் தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டன, இதுபோல் விமர்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்தர கிரி கருத்து கூறியுள்ளார்.

கரோனாவின் இரண்டாவது பரவலால் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உயிர் பலிகள் அதிகரித்தன. இதன் இறுதிச் சடங்குகளையும் முறையாக செய்ய முடியாத நிலை உறவினர்களுக்கு ஏற்பட்டது.

இச்சூழலில் கடந்த வாரம் உபி மற்றும் பிஹாரின் சில பகுதிகளின் கங்கையில் இறந்த உடல்கள் மிதந்தன. கரைகளில் புதைக்கப்பட்டவையும் நதி நீரால் அடித்து சென்றிருந்தது.

மேலும், கரைகளில் காவித்துணி சுற்றி புதைக்கப்பட்டதால் தூரத்திலிருந்தும் அவை பரவலாகத் தெரிந்தது. இதனால், அந்த துணியை உ.பி.யின் பல்வேறு மாவட்ட நகராட்சி பணியாளர்கள் உருவி எடுத்தனர்.

இதுவும் சர்ச்சையாகி கங்கையின் கரையில் புதைப்பதிலும், நதியில் வீசுவதன் மீதும் கடும் விமர்சனங்கள் கிளம்பின. இதை வன்மையாகக் கண்டித்து அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவரான மஹந்த் நரேந்தர கிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மஹந்த் நரேந்தர கிரி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்துக்களில் இறப்பவர்களின் உடல்களை நதிகளில் விடுவதும், அதன் கரைகளில் புதைப்பதும் பாரம்பரியப் பழக்கம்.

இந்த கலாச்சாரம் இந்து மதம் உருவானது முதல் தொடர்கிறது. இதன் மீது கேள்வி எழுப்புவதும், விமர்சனங்கள் செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

மத்தியில் பிரதமராக நரேந்தர மோடி, உ.பி.யில் முதல்வராக யோகி ஆதித்யநாத்தின் இந்துத்துவா அரசாக ஆட்சி செய்கின்றன. இதில் பல்வேறு தீயசக்திகள் புகுந்து சனாதன தர்மத்தை சிதைக்க முயல்கின்றனர்.

இந்தவகையில், தற்போது இறந்த உடல்களை குறி வைத்து விமர்சனம் எழுப்புகின்றனர். இதை இந்துக்களால் ஏற்று சகித்து கொண்டிருக்க முடியாது.

இதுபோல், கங்கையில் செல்லும் உடல்களை கரோனாவுடன் சிலர் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். கரோனாவிற்கு முன்பாகவும் இந்த வழக்கம் இருந்தது.

இந்து முறைப்படி இறந்தவர்களின் உடல்களுக்கு மூன்று வகை வகையாக இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன. பொதுமக்களின் உடல்களை தகனமேடைகளில் எரித்த பின் அதன் சாம்பல்களை நதிகளில் கரைக்கப்படுகிறது.

ரிஷிகளும், முனிகளும் நதிகளில் மூழ்கி ஜலசமாதி அடைகிறார்கள். இவர்களில் இன்னும் பலர் தாங்கல் வாழ்ந்த பகுதிகளிலேயே மண்ணில் புதைந்து பூமி சமாதியை ஏற்கிறார்கள்.

இதனை விமர்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x