

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 929 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 45நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,790குறைந்துள்ளது.
நாட்டில் பெரிய அளவில் கரோனா பாதிப்பு இருந்தபோது மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இரு்தது. இப்போது மகாராஷ்டிராவிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. மும்பையில் இந்த மாதத்தில் 2-வது முறையாக பாதிப்பு ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது.
மும்பையில் நேற்று புதிதாக 929 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 18-ந் தேதி நகரில் 953 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதேபோல மார்ச் 2-ந்தேதிக்கு பிறகு மும்பையில் பதிவான குறைந்தபட்ச பாதிப்பு இதுவாகும். ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தாராவியில் நேற்று புதிதாக 4 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
மும்பையில் இதுவரை 7 லட்சத்து 3 ஆயிரத்து 461 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 808 பேர் உயிரிழந்து உள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 94 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.
பலி எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. மும்பையில் நேற்று 30 பேர் பலியாகினர். கடந்த மாதம் 13-ம் தேதிக்கு பிறகு பதிவான குறைவான எண்ணிக்கை இது ஆகும்.