

‘யாஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும், அந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், அதற்கேற்ப கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாறி மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கடந்த 26-ம் தேதி கரையை கடந்தது. இதில் ஜார்க்கண்ட் மாநிலமும் கடுமையான பாதிப்பை சந்தித்தது. மேற்கு வங்கத்தில் சுமார் 1,100 கிராமங்களை கடல் நீர் சூழ்ந்துள்ளதால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் ஒடிசா சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்துக்கு சென்று பிரதமர் அங்கு புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அதிகாரிகளை சந்தித்து புயல் சேத நிலவரங்களை அவர் கேட்டறிந்தார். பிறகு, அங்கிருந்து அவர் டெல்லி திரும்பினார்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.1,000 கோடியை உடனடி நிவாரணமாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இதில் ஒடிசாவுக்கு மட்டும் ரூ.500 கோடியும், மேற்கு வங்கம், ஜார்க்கண்டுக்கு சேர்த்து ரூ.500 கோடியும் வழங்கப்படும். இந்த மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் புயல் சேதங்களை முழுமையாக ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழுக்கள் அனுப்பப்பட உள்ளன. இந்தக் குழுவினரின் ஆய்வறிக்கையை பொறுத்து, அந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிஅளித்துள்ளார்.
இதேபோல, புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.