

டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ராகுலுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜவடேகர் கூறினார்.
நாட்டில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால், கரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட பலர் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர். மேலும், இந்திய மக்களுக்கு கொடுக்காமல், வெளிநாடுகளுக்கு இலவசமாக வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்நிலையில் டெல்லியில் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறுகிறார். மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் ராகுல் காந்திக்கு அக்கறை இருந்தால் அவர் முதலில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் குழப்பம் நிலவுகிறது.
18 வயது முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்துவதற்காக மாநில அரசு களுக்கு தடுப்பூசி ஒதுக்கப் பட்டுள்ளது. அந்த ஒதுக்கீட்டை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் ‘டூல்கிட்’டை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. ராகுலின் பேச்சு அதை உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.- பிடிஐ