Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

பிரதமர் மோடி தலைமையில் யாஸ் புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்: 30 நிமிடங்கள் தாமதமாக வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா- மத்திய அரசு கடும் அதிருப்தி

வங்கக்கடலில் உருவான யாஸ் புயலால், ஒடிசா, மேற்கு வங்கத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் நேற்று பிற்பகல் இரண்டரை மணி முதல் மூன்றரை மணி வரை மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் கலாய் குண்டாவில் சந்தித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா 30 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் மம்தா, கலாய்குண்டாவில் பிரதமரை 15 நிமிடம் சந்தித்து புயல் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து விளக்கினார். அப்போது அவர் மாநில அரசின் சூறாவளி சேத மதிப்பீட்டு அறிக்கையை பிரதமரிடம் ஒப்படைத்தார். மத்திய அரசிடமிருந்து ரூ.20,000 கோடி நிதியை கோரி உள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறும் போது ‘‘புயல் பாதிப்பு தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார். நான் திகா பகுதியில் ஒரு கூட்டம் நடத்தினேன். அந்த இடத்திலிருந்து பிரதமர் கூட்டம் நடத்திய இடத்துக்கு வர தாமதமாகிவிட்டது. பின்னர் பிரதமர் அனுமதியை பெற்றுக் கொண்டுதான் கூட்டத்திலிருந்து வெளியேறினேன்’’ என்றார்.

இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘மம்தாவின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி. இதுபோன்ற மரியாதைக் குறைவான, ஆணவம் மிகுந்த முதல்வரை இப்போதுதான் பார்க்கிறோம். இந்திய குடியரசு வரலாற்றில் இவரை போன்று யாரும் நடந்தது இல்லை. மேற்கு வங்கத்தின் மற்ற மூத்த அரசு அதிகாரிகளையும், பிரதமரைச் சந்திக்க விடாமல் செய்துவிட்டார் மம்தா. முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு இப்படி கண்ணியமற்ற முறையில் நடப்பது நியாயமா” என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x