Published : 02 Jun 2014 03:31 PM
Last Updated : 02 Jun 2014 03:31 PM

தெலங்கானாவை முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவோம்: சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலத்தை அனைத்து விதத்திலும் ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவேன் என அம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகர ராவ் சூளுரைத்துள்ளார். வளர்ச்சியும், நன்நிலையும் இந்த அரசின் உந்துசக்தியாக இருக்கும் என்றார்.

அவர் மேலும் கூறும்போது, "தெலங்கானா அரசு மத்திய அரசுடன் மட்டுமல்ல அண்டை மாநிலங்களுடனும் நல்லுறவை பேணும். அரசியல் ஊழலை வேரறுத்து வெளிப்படையான அரசாங்கத்தை நடந்த்துவதே எங்களது தலையாய கடமையாக இருக்கும்.

தெலங்கானா மக்கள், இந்த மாநிலம் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என எதிர்நோக்கி இருக்கின்றனர். அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவோம். வெளிப்படையாக நிர்வாகம் செய்வோம். தெலங்கானாவை அனைத்து விதத்திலும் ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவோம். தெலங்கானா ஆலோசனைக் குழு அமைக்கப்படும். அந்தக் குழுவிடம் அரசுக்கு தேவையான ஆலோசனைகள் பெறப்படும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பிரச்சாரத்தில் கூறியதுபோல், மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கபப்டும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மக்கள் நலனுக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படும்.

இதில், 50,000 கோடி ரூபாய், தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக செலவிடப்படும். இந்த நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது ஒரு ரூபாய் கூட ஊழல்வாதிகள் கையில் சிக்காமல் அரசு கண்காணிக்கும்.

ஏற்கெனவே உறுதி அளித்தபடி விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும். தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x