Last Updated : 12 Dec, 2015 09:53 AM

 

Published : 12 Dec 2015 09:53 AM
Last Updated : 12 Dec 2015 09:53 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசின் நிவாரணங்கள் என்ன? - நாளை சென்னை வரும் வெங்கய்ய நாயுடு அறிவிப்பாரா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசின் சிறப்பு நிவாரண உதவிகள் என்ன என்பதை நாளை சென்னை வரும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் என்று அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என தகவல் வெளியானது. இதுகுறித்தும், தமிழக வெள்ள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடர் (Calamity of Severe Nature) என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் தரப்படும் சிறப்பு நிவாரண உதவிகள் குறித்தும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ‘தி இந்து’ தரப்பில் கேள்வி எழுப்பப் பட்டது.

இதற்கு மத்திய அமைச்சர் பதில் அளிக்கும்போது, “ஞாயிற்றுக் கிழமை நான் தமிழகம் செல்ல இருக்கிறேன். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறேன். பிறகு தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பிறகு இதைப் பற்றி பேசலாம்” என்றார்.

தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் என்று அறிவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி கடிதம் எழுதினார். இந்த இயற்கை பேரிடரை தேசிய பேரிடர் என்று அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக ‘தி இந்து’வில் நேற்று செய்தி வெளியாகி இருந்தது.

அதே நாளில் தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று வெள்ள பாதிப்புகளை ‘அதிதீவிர இயற்கை பேரிடர்(Calamity of Severe Nature)’ என மத்திய அரசு அறிவித்திருப்பதாக தமிழக அரசு சார்பில் செய்தி வெளியானது. ஆனால் மத்திய அரசின் சார்பில் இதுகுறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இந்நிலையில் இந்த வரையறையின் கீழ் மத்திய அரசு அளிக்கும் நிவாரண உதவிகள் குறித்து நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை கடந்த பிப்ரவரியில் மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக் கப்பட்டது. இதில் அதிதீவிர இயற்கை பேரிடரை எவ்வாறு வரையறுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மத்திய அரசு எதை எதை ஏற்றுக்கொண்டது என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இயற்கை பேரிடர் என்பது எப்போதாவது நிகழும் சம்பவம் என்பதால் இதில் யாரும் ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x