Published : 28 May 2021 03:11 PM
Last Updated : 28 May 2021 03:11 PM

ஜூன் மாதத்திலிருந்து அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி: விலை ரூ.1195

ஜூன் மாதத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு டோஸுக்கு ரூ.1195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், தடுப்பூசி மருந்தின் விலை ரூ.995 என்றும், ஊசி செலுத்துவதற்கான கட்டணம் ரூ.200 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் சோபனா காமினேனி கூறியதாவது:

கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைகள் வாயிலாக 80 இடங்களில் பத்து லட்சம் பேருக்குத் தடுப்பூசி வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் முன்களப் பணியாளர்கள், எளிதில் தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள் அடங்குவர். ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம். அதேவேகத்தில் சென்றால் செப்டம்பர் மாதத்துக்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்குவதே இலக்கு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, கடந்த மே 1-ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முறையான அனுமதி கிடைத்ததையடுத்து, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது.

இநிலையில், இந்தியா தடுப்பூசியில் தன்னிறைவு அடைந்துவருகிறது என்றும் சொல்லும் அளவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து ஒவ்வொரு மாதமும் 4 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்யவிருக்கிறது. இதனால் தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x