

கரோனா இரண்டாவது அலைக்கு முழு பொறுப்பு பிரதமர் மோடிதான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோவிட் தொற்று என்றால் என்ன என மத்திய அரசுக்கு புரியவில்லை. கோவிட் குறித்து புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது. கோவிட் இரண்டாவது அலை தாக்கும் என ஏற்கெனவே எச்சரிக்கை செய்தேன். ஆனால், அதனை மத்திய அரசு ஏளனம் செய்தது. வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்கிறது
கரோனாவை பற்றி பிரதமர் மோடி அறிந்து கொள்ளவில்லை. முதல் அலையின் போது யாருக்கும் தெரியாது. ஆனால், இரண்டாவது அலைக்கு பிரதமரே காரணம். பிரதமர் மோடி நிகழ்ச்சி நடத்தும் மேலாளராக செயல்படுகிறார்.
எங்களுக்கு நிகழ்ச்சிகள் தேவையில்லை. உத்திகள் தான் தேவை. இந்தியாவின் கரோனா உயிரிழப்பு விகிதம் உண்மையல்ல. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உண்மையை வெளியிட வேண்டும். கரோனா இரண்டாவது அலைக்கு முழு பொறுப்பு பிரதமர் மோடிதான்.
மொத்த மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதத்தினருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரேசிலில் 8 முதல் 9 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியின் தலைநகரமாக அவர்கள் இல்லை. ஆனால், நாம் இருக்கிறோம். தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறோம்.
தடுப்பூசி மட்டுமே முழுமையான தீர்வாக இருக்கும். ஊரடங்கு, சமூக இடைவெளி ஆகியவை தற்காலிக தீர்வுகள் மட்டுமே. தடுப்பூசி உத்திகளுக்கு தீர்வு காணாவிட்டால் இந்தியாவில் பல அலைகளாக கரோனா தாக்கும். அதற்கு முன்பாக மத்திய அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.