Last Updated : 28 May, 2021 11:56 AM

 

Published : 28 May 2021 11:56 AM
Last Updated : 28 May 2021 11:56 AM

உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது கொடூரமானது; நீக்குங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப் படம்.

புதுடெல்லி

கரோனாவுக்கு எதிரான போரில் உயிர் காக்கும் மருந்துகள், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது கொடூரமானது. அதை உடனடியாக நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கையை பிரியங்கா காந்தி வைத்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுகிறது. கரோனாவுக்கு எதிரான போர் முடிந்து நிலைமை சீராகும் வரை இந்த வரியை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரியங்க காந்தி ட்விட்டரில் இணைத்துள்ள பட்டியல்

கருப்புப் பூஞ்சை தொற்றை குணப்படுத்தும் ஆம்போடெரசின்-பி மருந்துக்குக் கூட இறக்குமதி வரிவிதித்த நிலையில், அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, மத்திய அரசு வரி தள்ளுபடி முடிவு எடுக்கும்வரை கருப்புப் பூஞ்சைக்கான மருந்தை வெளிநாடுகளில் இருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்யலாம். ஒருவேளை வரி தள்ளுபடி அளிக்கவில்லை என்றால் இறக்குமதியாளர் வரி செலுத்தட்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இதே கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ்களுக்காகவும், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும், வென்டிலேட்டர்களுக்காகவும், ஆக்சிஜன்களுக்காகவும், மருந்து, தடுப்பூசிகளுக்காகவும் தடுமாறி வருகிறார்கள். ஆனால், உயிர் காக்கும் பொருட்கள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிப்பது கொடூரத்தையும், உணர்வற்ற நிலையையும் காட்டுகிறது.

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது. கரோனாவுக்கு எதிரான போரில் பயன்படும் உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவுக்கு எதிராகப் பொதுவாகப் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களின் பட்டியலையும் பிரியங்கா காந்தி இணைத்துள்ளார்.

காங்கிஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நரேந்திர மோடி அரசு, ஆட்சிக்கு வரும் முன் நல்ல காலம் வந்துவிட்டதாகக் கூறியது. ஆனால், தற்போது சமூக வலைதளத்தில் பொய்யான தோற்றத்துக்குதான் முன்னுரிமை கொடுக்கிறது. மிகப்பெரிய அளவிலான விலைவாசி உயர்வு, கரோனா தடுப்பூசிதான் மக்களுக்குக் கிடைக்கிறது. இது என்ன மாதிரியான நல்ல காலம்” எனக் கேட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x