Last Updated : 28 May, 2021 11:11 AM

 

Published : 28 May 2021 11:11 AM
Last Updated : 28 May 2021 11:11 AM

2 டோஸ் முடிந்தபின்பும், 'பூஸ்டர்' தடுப்பூசி தேவை குறித்து ஆய்வு: மத்திய அரசு தகவல்

கரோனா வைரஸுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டபின்பும், பூஸ்டர் தடுப்பூசி ஏதும் செலுத்த வேண்டுமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஏனென்றால் எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்காது என்று நிதிஆயோக் சுகாதாரக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்தார்.

நிதி ஆயோக் சுகாதாரக்குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எந்தத்தடுப்பூசியும் 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்காது. ஆதலால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டபின்பு குறிப்பிட்ட இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி ஏதும் செலுத்த வேண்டுமா என்பது குறித்த ஆய்வு நடந்து வருகின்றன. அவ்வாறு தேவையென்றால் முறைப்படி மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட தொற்றுநோய்க்கு எதிராக நாம் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற வேண்டும். கோவாக்சின் 2 டோஸ் செலுத்திக்கொண்டபின் 6 மாதங்களுக்குப்பின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவேண்டுமா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.

ஆதலால், அதுவரை மத்திய சுகதாாரத்துறை கூறும் அறிவுரைகளைப்பின்பற்றி, 2 டோஸ் தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக்கொண்டு, கரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒத்துழைக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கரோனாவில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள், ஆனாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், 100 சதவீதம் பாதுகாப்பை தடுப்பூசி அளிப்பதில்லை.

பைஸர் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது. ஜூலை மாதத்திலிருந்து பைஸர் தடுப்பூசி இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசிடம் இருந்து பைஸர் நிறுவனம் என்ன எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது, நாங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது பற்றி பேசி வருகிறோம்.

இந்தியாவுக்கு பைஸர் நிறுவனம் வர வேண்டும், உரிமம் பெறுதல், பதப்படுத்தும் சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

பைஸர் நிறுவனம் தங்களுக்கு காப்பீடு பாதுகாப்புக் கோரியுள்ளனர். அந்தக் கோரிக்கையை நாங்கள் ஆய்வு செய்து, பெரும்பான்மையான மக்களின் நலனின் அடிப்படையில் முடிவு செய்வோம். இப்போதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு வி.கே.பால் தெரிவித்தார்.

பைஸர் நிறுவனம் தரப்பில் கூறுகையில் “ இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை சில நிபந்தனைகளுடன் ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்குள் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் செலுத்தலாம்.

இந்தியாவில் உள்ள உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக பைஸர் தடுப்பூசி செயல்படும். பைஸர் தடுப்பூசி 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை செல்சியஸில் ஒருமாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x