Published : 28 May 2021 10:31 AM
Last Updated : 28 May 2021 10:31 AM

கரோனாவால் உயிரிழந்த 67 பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி

கோவிட்-19 காரணமாக உயிரிழந்த 67 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழிகாட்டுதலின் கீழ், 2020 & 2021 ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குறித்த தகவல்களை தாமே முன்வந்து சேகரித்த தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், பத்திரிகையாளர்கள் நல திட்டத்தின் கீழ் அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது.

கோவிட்-19 காரணமாக உயிரிழந்த 26 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கான, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அமித் காரே தலைமையிலான பத்திரிக்கையாளர் நல திட்ட குழுவின் முன்மொழிதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிதியாண்டு 2020-21-ல் கோவிட்-19 காரணமாக உயிரிழந்த 41 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு இத்தகைய நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தனது வருத்தத்தை பத்திரிக்கையாளர் நலத்திட்ட குழு தெரிவித்தது.

கோவிட்-19 காரணமாக உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்ட பத்திரிகை தகவல் அலுவலகம், நல்ல திட்டம் குறித்து வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்கியதோடு கோரிக்கை படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் விளக்கியது.

நிதி உதவியை விரைந்து வழங்குவதற்காக பத்திரிக்கையாளர் நலத்திட்டக் குழுவின் கூட்டத்தை வாரம் ஒருமுறை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 காரணமாக உயிரிழந்த 11 பத்திரிகையாளர்களின் குடும்பங்களின் விண்ணப்பங்களை குழு இன்று பரிசீலித்தது.

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் ஜெய்தீப் பட்நாகர் மற்றும் (தகவல் மற்றும் ஒலிபரப்பு) இணை செயலாளர் விக்ரம் சகாய் உள்ளிட்ட குழுவின் இதர உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்களின் பிரதிநிதிகளான சந்தோஷ் தாகூர், அமித் குமார், உமேஷ்வர் குமார் மற்றும் சஞ்சனா சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.

பத்திரிகையாளர் நலத்திட்ட உதவிக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்:

https://accreditation.pib.gov.in/jws/default.aspx

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x