Last Updated : 28 May, 2021 10:23 AM

 

Published : 28 May 2021 10:23 AM
Last Updated : 28 May 2021 10:23 AM

தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது: கேரளாவில் 31ம் தேதி தொடங்க வாய்ப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

மேற்கு வங்கக் கடலின் பல பகுதிகளிலும், மாலத்தீவு பகுதிகளிலும் மத்திய வங்கக் கடலிலும் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியேத் தொடங்கும் என்பதால், கேரளாவில் 31-ம்தேதியே பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கும். ஆனால், யாஸ் புயல் உதவியால் அரபிக்கடல் பகுதிக்கு பருவமழையை இழுத்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது “ தென் மேற்கு பருவமழை மாலத்தீவு-குமரி கடற்பகுதியிலும், தென்மேற்கு மற்றும் வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியிலும், வங்கக்கடலின் தென்கிழக்குப்பகுதிகள், மத்தியமேற்குப் பகுதிகளில் 27-ம்தேதியே தொடங்கிவிட்டது.

ஆதலால், கேரளாவில் தென் மேற்கு பருவமழை வரும் 31-ம்தேதியே தொடங்குவதற்கு சூழல் சாதகமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ம்தேதி தொடங்கும் பருவமழை ஒருநாள் முன்கூட்டியே கேரளாவில் தொடங்குகிறது. நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும் இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது.

வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் சில பகுதிகள், ஆந்திரா ஆகியவற்றுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும்.

பருவமழையைத் தீர்மானிக்கும் 3 காரணிகள் என்ன?

பருவமழையைத் தீர்மானிக்க மூன்று வகையான காரணிகள் உள்ளன. மே 10-ம் தேதிக்குப் பின் கேரளாவில் உள்ள 14 வானிலை மையங்களான மனிகாய், அமினி, திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆழப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், குடகு, மங்களூரு ஆகியவற்றில் தொடர்ந்து இரு நாட்களுக்கு மேலாக 2.5 மில்லிமீட்டருக்கு மேல் பெய்திருந்தால் பருவமழை செட்டாகிவிட்டது.

2-வதாக மேற்கிலிருந்து வரும் காற்று 600 ஹெக்டோபாஸ்கஸ் (ஹெச்பிஏ) இருத்தல் வேண்டும், 3-வதாக அவுட்வேவ் லாங்வேவ் ரேடியேஷன் சதுர கிலோ மீட்டருக்கு 200 வாட்டுக்குக் கீழ் இருத்தல் வேண்டும். இந்த மூன்று காரணிகளும் பொருந்தினால் பருவமழை தொடங்கிவிட்டதாக கணக்கில் கொள்ளப்படும் என இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x