Published : 28 May 2021 10:05 AM
Last Updated : 28 May 2021 10:05 AM

சட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: ட்விட்டரின் அறிக்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

ட்விட்டர் வெளியிட்ட அறிக்கைக்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் ‘‘சமூக ஊடக நிறுவனங்கள் அதன்அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர்தல்’’ போன்ற விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகள் குறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘ இந்திய மக்களுக்கு சேவை வழங்குவதில் ட்விட்டர் எப்போதுமே பொறுப்புடன் செயல்படும். தொடர்ந்து இந்தியாவில் சேவை வழங்க சட்ட விதிமுறைகளின்படி செயல்பட ட்விட்டர் தயாராகவே உள்ளது. ஆனால், கருத்து சுதந்திரம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலாக உத்திகளைக் கையாள்வது கவலை அளிக்கிறது.

ட்விட்டர் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் எழுகிறது. சட்ட விதிமுறைகளை மதிக்கும் அதேசமயம் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கருத்து சுதந்திரம், வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கொள்கைகளின்படி இயங்குவதே சரியானது. எனவே புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசுடன் இதுதொடர்பாக திறந்த பேச்சுவார்த்தை நடத்த ட்விட்டர் நிறுவனம் தயாராக உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் வெளியிட்ட அறிக்கைக்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவதில் இந்தியா பல நூற்றாண்டுகளாக பெருமை மிக்க பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் சுதந்திரமான பேச்சை காப்பது, டிவிட்டர் போன்ற தனியார் மற்றும் லாப நோக்குடன் செயல்படும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு மட்டுமான, தனிச்சிறப்புரிமை அல்ல.

ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு மற்றும் அதன் வலுவான அமைப்புகளின் உறுதிப்பாடு அர்ப்பணிப்பு கொண்டவையாகும்.

ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, தனது விதிமுறைகளை கூறும் முயற்சி. ட்விட்டர் தனது செயல்பாடுகள் மற்றும் வேண்டுமென்றே எதிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் சட்ட அமைப்பை குறைவாக மதிப்பிட முயற்சிக்கிறது. மேலும், இந்தியாவில் எந்த குற்றத்துக்கும் பொறுப்பேற்பதிலிருந்து பாதுகாப்பை கோருவதன் அடிப்படையில், இடைக்கால வழிகாட்டுதல் ஒழுங்குமுறைகளை பின்பற்ற ட்விட்டர் மறுக்கிறது.

மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், ட்விட்டர் நிறுவனம் மிகவும் உறுதிப்பாட்டுடன் இருந்தால், அதுபோன்ற செயல்முறையை ஏன் இந்தியாவின் ஏன் ஏற்படுத்தவில்லை? ‘‘எங்களுக்கு அதிகாரம் இல்லை, அவர்களும், இந்தியாவில் உள்ள மக்களுக்கும் அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்துக்கு அனைத்து பிரச்சனைகளையும் தெரிவிக்க வேண்டும்’’ என இந்தியாவில் உள்ள ட்விட்டர் பிரதிநிதிகள் தொடர்ந்து கூறுகின்றனர். இதன் மூலம் இந்திய பயனர் தளத்துக்கு, ட்விட்டரின் அர்ப்பணிப்பு, வெற்றுத்தனமாக மட்டும் அல்லாமல், முற்றிலும் சுயசேவையாக இருக்கிறது.

ட்விட்டர் உட்பட அனைத்து சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளும் இந்தியாவில் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது என இந்திய அரசு விரும்புகிறது.

ட்விட்டரின் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. இது தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி. இந்த துரதிருஷ்டமான அறிக்கையை இந்திய அரசு கண்டிக்கிறது.

நடைபெறும் விசாரணை தொடர்பாக டெல்லி போலீஸ், விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ட்விட்டர் எழுப்பிய முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x