

கேரளாவில் கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்கத்தில் ரூ.3 லட்சம் நிதியுதவியும், 18 வயதுவரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையும் கேரள அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலையில் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இதில் குழந்தைகளின் நிலை பரிதாபத்துக்குரியது.
கரோனா வைரஸால் பல மாநிலங்களில் பெற்றோர் இருவரையும் இழத்தல், தாய், தந்தை இருவரில் ஒருவரை இழத்தல் போன்ற பரிதாப நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். கரோனா வைரஸால் ஏற்கெனவே குழந்தைகளின் கல்விச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பச்சூழலும் வேதனைக்குரியதாக மாறி குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்குகிறது.
குழந்தைகளின் நிலையை உணர்ந்த ஏராளமான தன்னார்வ அமைப்புகள், மாநில அரசுகள் குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோரை இழந்துவிட்டால் நிவாரண உதவிகளை அளித்து வருகி்ன்றன.
கேரள அரசும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கரோனா வைரஸால் மாநிலத்தில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தைகளுக்காக சிறப்பு உதவித்திட்டத்தை கேரள அரசு கொண்டு வந்துள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாப்பது அவசியமானது. இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்க உதவித்தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதன்பின் 18வயதுவரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அந்த குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அதற்கான கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 24,166 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாஸிட்டிவ் சதவீதம் 17.87 ஆக குறைந்துள்ளது. 181 பேர் உயிரிழந்துள்ளனர். பத்தினம்திட்டா, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மூக்குக்கண்ணாடி கடை, பழுதுபார்க்கும் கடைகள், செல்போர் பழுதுநீக்கும் கடைகள், கணினி ரிப்பேர் கடைகள் போன்றவை அடுத்த 2 நாட்களுக்கு மட்டும் திறக்கப்படும்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.