

இந்தியாவில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எடுக்கப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது என்று ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் ‘டூல்கிட்’ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளதாக பாஜக-வினர் குற்றம்சாட்டினர். கரோனா வைரஸை ‘மோடி வைரஸ் என்று குறிப்பிட வேண்டும்’ என்றும், ‘கும்பமேளாதான் கரோனா இரண்டாம் அலைக்கு காரணம் என்று தொடர்ந்து சொல்லுங்கள்’ என்றும் அந்த ‘டூல்கிட்’ உள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா குற்றம் சாட்டினார். அதை ட்விட்டரில் பகிர்ந்தார்.
ஆனால், இந்த டூல்கிட் விவகாரம் உண்மையல்ல, இதை தாங்கள் உருவாக்கவில்லை என்றுகாங்கிரஸ் போலீஸில் புகார் அளித்தது. இதையடுத்து, சாம்பித் பத்ராவின் ட்வீட்டை manipulated media அதாவது, உண்மைக்கு மாறானது என்று ட்விட்டர் நிர்வாகம் டேக் செய்தது. ட்விட்டர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பாஜகவினரிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது.
மத்திய அரசு ட்விட்டர் டேக்செய்ததை நீக்க வேண்டுமென உத்தரவிட்டது மட்டுமல்லாமல் ட்விட்டர் நிறுவன அலுவலகங்களில் காவல் துறை அதிரடியாக புகுந்தது. இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் சமூக ஊடக நிறுவனங்கள் அதன்அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர்தல் போன்ற விதிமுறைகள் உள்ளன.
இந்த விதிமுறைகள் குறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய மக்களுக்கு சேவை வழங்குவதில் ட்விட்டர் எப்போதுமே பொறுப்புடன் செயல்படும். தொடர்ந்து இந்தியாவில் சேவை வழங்க சட்ட விதிமுறைகளின்படி செயல்பட ட்விட்டர் தயாராகவே உள்ளது. ஆனால், கருத்து சுதந்திரம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலாக உத்திகளைக் கையாள்வது கவலை அளிக்கிறது.
ட்விட்டர் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் எழுகிறது. சட்ட விதிமுறைகளை மதிக்கும் அதேசமயம் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கருத்து சுதந்திரம், வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கொள்கைகளின்படி இயங்குவதே சரியானது. எனவே புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசுடன் இதுதொடர்பாக திறந்த பேச்சுவார்த்தை நடத்த ட்விட்டர் நிறுவனம் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ