

தடுப்பூசிகளை வீணடிப்பதில் முதல் இரண்டு இடங்களில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் உள்ளன. தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மூன்றில் ஒரு பங்கு தடுப்பூசி வீணடிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை வீணடிப்பதில் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 3-வது இடத்தில் தமிழகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் கூறியிருப்பதாவது: தடுப்பூசிகள் வீணாகும் விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்திருக்க மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பல மாநிலங்கள் அதிகளவில் வீணாக்குகின்றன. தேசிய அளவில் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சத்தீஸ்கர் (30.2%), தமிழகம் (15.5%),ஜம்மு - காஷ்மீர் (10.8%), மத்திய பிரதேசம் (10.7%) உள்ளன. மேலும், தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக பல மாநிலங்கள் புகார் கூறுகின்றன. அதே நேரம் கணிசமான அளவில் தடுப்பூசி வீணடிக்கப்படுவதை அனுமதிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் பதிவில், ஜார்க்கண்டில் 4.65 சதவீதம் தடுப்பூசிகள் மட்டுமே வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.-பிடிஐ