Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

மும்பையிலிருந்து கட்டணம் ரூ.18 ஆயிரம் மட்டுமே: ஒரே பயணியுடன் யுஏஇ பறந்த எமிரேட்ஸ் விமானம்

புதுடெல்லி

ஒரே ஒரு பயணியுடன் மும்பையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) பறந்துள்ளது எமிரேட்ஸ் ஜெட் விமானம். போயிங்777 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 360 பேர் பயணிக்கலாம். ஆனால் மும்பையிலிருந்து ஜவேரிஎன்ற பயணி மட்டுமே மே 19-ம் தேதி பயணித்துள்ளார்.

ஸ்டார்ஜெம்ஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜவேரி, எமிரேட்ஸ் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர். இவரது பெற்றோர் மும்பையில் வசிக்கின்றனர். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை பெற்றுள்ளார். பெற்றோரைப் பார்க்க மும்பைக்கு வந்த இவர், மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் திரும்ப எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தார்.

கரோனா தொற்று காரணமாக இந்தியாவிலிருந்து பயணிகள்எவருக்கும் அனுமதி கிடையாது. ஆனால் ஐக்கிய அரபு குடியுரிமை பெற்றவர்கள், கோல்டன் விசா பெற்றவர்கள் மற்றும்வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் கோல்டன் விசா வைத்திருந்ததால் ஜவேரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வழக்கமாக உயர் வகுப்பில் முன்பதிவு செய்து பயணிக்கும் ஜவேரி, இம்முறை சாதாரண வகுப்பில் முன்பதிவு செய்திருந்தார். இதற்கான விமான கட்டணம் ரூ.18 ஆயிரம் மட்டுமே. கரோனா தொற்று காரணமாக விமான நிலையமே வெறிச்சேடி காணப்பட்ட நிலையில், ஐவேரி அங்கு சென்றபோது வாயிலில் எமிரேட்ஸ் ஊழியர்கள் இவருக்காகக் காத்திருந்தனராம்.

விமானத்தினுள் நுழைந்தபோது விமான பணிப்பெண்கள் இவருக்கு கை தட்டி வரவேற்பளித்துள்ளனர். அத்துடன் ஒவ்வொரு முறையும் இவரது பெயரைக் குறிப்பிட்டு அறிவிப்புகள், தகவல்களை வெளியிட்டது மிகவும் பரவசமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தனக்கு மிகவும் அதிர்ஷ்டமான 18-ம் எண் கொண்ட இருக்கையை தேர்வு செய்து அதில் பயணித்ததாக அவர் குறிப்பிட்டார். தனியாக பயணிக்க அச்சமாக இருக்கிறது என தெரிவித்து பயணத்தை ரத்து செய்து விடுவாரோ என விமான சிப்பந்திகள் நினைத்ததாக அவர் மேலும் கூறினார்.

இதற்கு முன்பு குறைவான பயணிகள் மட்டுமே பதிவு செய்திருந்ததால் 14 பேர் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானத்தை எமிரேட்ஸ் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அப்போது அதில் 9 பயணிகள் இருந்ததாகவும் அவர் கூறினார். இரண்டரை மணிநேர பயணத்திற்கு ஜெட் விமானத்தில் செலவான 17 டன் பெட்ரோலின் மதிப்பு ரூ.8 லட்சமாகும். இது தொடர்பாக கருத்து எதையும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x