Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

‘யாஸ்‘ புயல் தாக்குதலால் ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கடும் சேதம்: மேற்கு வங்கத்தில் ஒரு கோடி பேர் பாதிப்பு- 3 லட்சம் வீடுகள் சேதம்; 1,100 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது

‘யாஸ்’ புயல் தாக்குதல் காரணமாக மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள் ளார். 1,100 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் மற்றும் பத்ராக் மாவட்டங்களும் ஜார்க் கண்ட் மாநிலமும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக் கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதிதீவிர புயலாக மாறி மேற்கு வங்கம் - ஒடிசா இடையே பாலசோ ருக்கு அருகே நேற்று முன்தினம் கரை யைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 140 கி.மீ. வேகத் தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. இந்த புயலால், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பலத்த மழை யும் பெய்ததால் இரு மாநிலங்களிலும் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது.

1,100 கிராமங்கள் வெள்ளத்தில்..

மேற்குவங்கத்தில் மிட்னாபூர், பன்குரா, தெற்கு 24 பர்கானா, ஜார் கிராம் ஆகிய மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மிட்னா பூரில் கடற்கரையை ஒட்டிய திகா என்ற நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள் ளது. சூறாவளிக் காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கடல் சீற்றம் காரணமாக மிட்னாபூர் மாவட்டம் சங்கர்பூர் கிராமத்தில் கடல் நீர் புகுந்தது. பலத்த மழையும் பெய்ததால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இந்த மாவட்டங்களில் சுமார் 1,100 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக் கின்றன.

5 பேர் உயிரிழப்பு

வீடுகளை இழந்த 50 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். மேற்கு வங்கத்தில் புயல் மற்றும் மழைக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதி களில் நேற்றும் சுறைக் காற்றுடன் மழை பெய்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் அதிகாரிகளும்் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் புயலால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, ‘‘புயலால் மாநிலத்தில் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரி கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 3 நாட்களுக்குப் பிறகுதான் முழுமையான சேத விவரம் தெரியவரும். 15 லட்சம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத் துள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன’’ என்றார்.

நவீன் பட்நாயக் ஆய்வு

ஒடிசாவில் புயல் கரையைக் கடந்த பகுதிக்கு அருகே உள்ள பாலசோர் மற்றும் பத்ராக் மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. பல்வேறு கிரா மங்களில் வெள்ளம் சூழ்ந்தது. புயலால் பாதிக்கப்பட்ட 128 கிராமங்களுக்கு ஒரு வாரத்துக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 6.5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவைப் பட்டால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை உட்பட மருத்துவ பரிசோதனைகள் செய்ய நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். பாலசோர், பத்ராக் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நவீன் பட்நாயக் நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜார்க்கண்டில் பாதிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் யாஸ் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட்டில் பலத்த மழை பெய்கிறது. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொகா ரோவில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் புயலால் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் அதிகாரிகள் கூறினர். மாநிலத்தில் 15 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்

யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 136 குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டது குறித்து மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர். புயல் பற்றிய வானிலை முன்னெச்சரிக்கை துல்லியமாக இருந்ததால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதன் மூலம் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதையும் தெரிவித்தனர். மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் பார்வையிடுவார் என்றும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து அந்த மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x